13

ஆள் காட்டிக் குருவி என்றொரு குருவி உண்டு. ஆங்கிலத்தில் இதை லேப்விங்(Lapwing) என்று அழைப்பார்கள். நம் நாட்டில் இரண்டு வகையான லேப்விங்களைக் காணலாம். இவை எல்லோ வேட்டில்ட் லேப்விங் (Yellow wattled Lapwing) ரெட் வேட்டில்ட் லேப்விங் (Red wattled Lapwing)என்பவை ஆகும். வேட்டில் என்பது இப்பறவையின் அலகு ஆரம்பிக்கும் இடத்தில் தலையின் இரு பக்கங்களிலும் காணப்படும் தோல் போன்ற ஒரு உறுப்பாகும். இதன் நிறத்தை வைத்துதான் இந்த இரண்டு பெயர்கள். இவ்வுறுப்பு இப்பறவைக்குத் தேவையான ஒரு உறுப்பா அல்லது ஒரு ஆபரணமா என்பது பற்றி யாரும் இது நாள் வரை ஆராய்ச்சி செய்துள்ளதாகத் தகவல் ஏதும் இல்லை.

1
(மஞ்சள் மூக்கு ஆள் காட்டிக் குருவி-படம் பிடித்தது நடராஜன் கல்பட்டு)
2.
(சிவப்பு மூக்கு ஆள் காட்டிக் குருவி படம் நடராஜன் கல்பட்டு)
ஆள் காட்டிக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது மரக் கிளிகளிலோ அல்லது மரப் பொந்துகளிலோ கூடு கட்டி அல்ல, தரையில் தான். தரையில் கூடு என்றவுடன் ஏதோ தேன் சிட்டு, தையல்காரக் குருவி,தூக்கணாங்குருவி போல அழகிய கூடு கட்டியிருக்கும் என்று நினைக்காதீர்கள். தரிசல் நிலங்கள், வயல் வெளிகள், ஆறு குளங்களில் நீர் வற்றிய இடங்கள் இவற்றில் சிறிய கற்கள் பலவற்றை ஒரு குழிவான தட்டு போல சேகரித்து அவற்றின் நடுவே மூன்று அல்லது நாலு முட்டைகள் இடும்.*இக்குருவி இடும் புள்ளிகள் கொண்ட முட்டைகளின் நிறம் சற்று ஆச்சரியம் அளிக்கக் கூடியது. சுற்றுப்புர நிலத்தின் நிறத்திற்க்கு ஏற்ப செம்மண் கலரிலோ ஸ்லேட் கலரிலோ இவை இருக்கும். அப்படி இருந்தால் தானே எதிரிகளின் கண்களில் இம்முட்டைகள் சட்டென்று தென்படாது ?
பறவைகளின் முட்டைக்கு ஓடு உண்டாவதோ அந்த ஓட்டிற்கு நிறம் தீர்மானிக்கப் படுவதோ முட்டைகள் ஜனன உருப்பிலிருந்து கிளம்பிக் கீழ் இறங்கி வெளிவரும்போது கடைசியாக நிகழும் ஒரு சம்பவமாம். இந்தப் பறவைகளுக்கு கூடு இருக்கும் நிலத்தின் நிறத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப முட்டையின் நிறத்தை மாற்றும் சக்தி இருக்க வேண்டும்.
ஆள்காட்டிக் குருவி தனது முட்டைகளை எப்படி மிகக் கவனமாக காப்பாற்றிக் கொள்கின்றன என்று பாருங்கள்.
ஓரு பறவை அடைகாத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பறவை சற்றே உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கும். ஆடு மாடுகளோ, மனிதர்களோ தரையில் உள்ள முட்டைகளை நோக்கி நடந்தால், காவல் காக்கும் பறவை, கிரக்…கிரக்…என அபாய ஒலி எழுப்பும். உடனே அடைகாத்துக் கொண்டிருக்கும் பறவை எழுந்திருக்காமல் குனிந்தபடியே சிறு தூரம் நடந்து சென்று பின் இரு பறவைகளுமாக ஆகாயத்தில் கிளம்பி கூட்டை நோக்கி நடப்பவரை / நடப்பதை விமானம் தாக்குவது போலத் (dive bombing) தாக்குதல் செய்யும். அவ்வாறு செய்யும் போது, ஆங்கிலத்திலே“Did you do it? Did you do it?” என்று கேட்பது போன்ற ஒலியினை எழுப்பும். ஆதலால் இப்பறவைகளை Did you do it bird’ என்று சிலர் வேடிக்கையாக அழைப்பார்கள்.
அப்படித் தாக்கிடும் போது தாக்குதலின் வேகமும், சத்தமும் நீங்கள் கூடு இருக்கும் இட்த்தினை நோக்கி நடக்கும் போது குறையும். கூடு இருக்கும் இட்த்தில் இருந்து வேறு திசையில் நடக்கும் போது அதிகரிக்கும். அதனால் நீங்கள் கூடு அந்த திசையில் இருப்பதாக எண்ணித் தேடிக் கொண்டிருப்பீர்கள். உங்களைத் தாக்கிடும் பறவை வெகு தூரம் வட்டமாகப் பறந்து சென்று தரை இறங்கி குனிந்த படியே நடந்து தன் கூட்டிற்கு வந்து விடும். என்ன ஒரு சாமர்த்தியம்!
இப்போது புரிகிறதா இந்தக் குருவியை ஏன் ஆள்கட்டிக் குருவி என்று பலரும் அழைக்கிறார்கள் என்பது?
இவ்வளவு கவனத்துடன் தன் முட்டைகளையும் குஞ்சுகளையும் பாதுகாக்கும் குருவியை நான் சில நாட்கள் தொடர்ந்து படம் பிடித்து வந்தேன். முதலில் கேமராவை மட்டும் கூட்டின் அருகில் வைத்து விட்டு தூரத்தில் இருந்து ரிமோட் ரிலீஸ் மூலம் படம் பிடித்து வந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் சென்று இறுதியில் அதனைத் தடவிக் கொடுத்தேன். பின் அடை காத்துக் கொண்டிருந்த பறவையை கையில் எடுத்து சுமார் இரண்டடி தூரத்தில் விட்டு அது தன் கூட்டினை அடையும் போது படம் எடுத்தேன்.
ஒரு முறை எனது நண்பர் ஒருவரை அப்பறவையைதடவிக் கொடுக்கச் செய்து எடுத்த படம்
இதோ.
(ஆள் காட்டிக் குருவிக்கு உடலெல்லாம் கூசுது!)
அடர்ந்த காடுகளில் புதர்களுக்கு இடையே புலி யார் கண்ணுக்கும் தெரியாமல் மெல்ல மெல்ல நகர்ந்து தன் இரை நோக்கிச் செல்லும்போது அதனைத் தன் அபாயச் சங்கினை ஊதி (Did you do it?….Did you do it? என்றபடி)பிறருக்கு அறிவிப்பது இந்த ஆள்காட்டிக் குருவி தான்.
இயற்கையின் எழிலில் நமக்கு இறைவன் காட்டும் விந்தைகளுக்கு ஒரு எல்லையும் உண்டோ?
 

 

***

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புகைப்பட அனுபவங்கள் Copyright © 2015 by கல்பட்டு நடராஜன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book