1

படங்களும் பாடங்களும்
_____________________________

திரு கல்பட்டு நடராஜன் நரசிம்மன் அவர்கள் தன்னுடைய புகைப்பட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ள மனமுவந்து ஒப்புக் கொண்டுள்ளார்.

அவருடைய வலைப்பூ :http://kalpattaarpakkangkal.blogspot.com/
அவரைப் பற்றிய சிறு குறிப்பு அவர் வாயிலாகவே

வயதில் முதிர்ந்தவன் (81முடிந்து விட்டது). எனது அனுபவங்கள் “கொடேக் பேபி ப்ரௌனி’ கால அனுபவங்கள். டி.எஸ்.எல்.ஆர். கால அனுபவங்கள் அல்ல. பெருத்த ஏமாற்றம் அடைவீர்களோ என்று வருந்துகிறேன்.

ஒரு காலத்தில் கழுத்தில் கேமிராக்களை (ஒரு ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், ஒரு சிங்கிள் லென்ஸ் ரிஃப்லெக்ஸ்) தொங்க விட்டுக் கொண்டு காட்டிலும் மேட்டிலும் அலைந்திருக்கிறேன், பறவைகள், விலங்குகள் இவற்றைப் படம் பிடிக்கும் எண்ணத்தில். சில படங்களும் எடுத்திருக்கிறேன்.

புகைப் படக் கண்காட்சிகளில் 13 முதல் பரிசுகளும் பெற்று இருக்கிறேன். ஏ.எஃப்.ஐ.ஏ.பி. (Associate de la Art Photographique) என்ற பட்டமும் பெற்றேன் Nature Photography யில். F.I.A.P. (Federation Internationale de La Art Photographique) என்பது இங்கிலாந்தின் ராயல் போடோக்ராஃபிக் சொஸைடி போன்ற ஒரு ஐரோப்பிய அமைப்பு. இதன் அத்தாட்சிப் பத்திரத்தினை குடியரசுத் தலைவர் கைகளில் இருந்து 1971ல் பெற்றேன்.

இனி அவருடைய புகைப்படப் பயணத்தில் நாமும் சேர்ந்து பயணிப்போமா ? வாருங்கள்.


பள்ளி நாட்களில் நண்பன் ஒருவனின் கொடேக் பேபி ப்ரௌனி கேமெராவை வைத்துக் கொண்டு பார்ப்பவரை எல்லாம் படம் பிடித்து வந்தேன். பின்னர் கான்பூரில் வேலை பார்த்த போது சொந்தமாக வாங்கிய யாஷிகா ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் கேமிராவில் படம் பிடிக்க ஆரம்பித்தேன். அப்போதும் நான் எடுத்த படங்கள் எல்லாம் மனிதர்களின் படங்களே. எப்போதாவது ஒரு சமயம் சமுத்திரக் கரையில் படகும் மீனவரும், சூரியோதயம் போன்ற படங்களை எடுத்தேன். அவற்றில் பல குறைந்த அல்லது அதிக நேரம் எக்ஸ்போஸ் ஆன படங்களாக இருக்கும். எட்டுக்கு ரெண்டு தேரும். அந் நாட்களில் தானியங்கிக் கேமிராக்கள் வரவில்லை.

வேலை நிமித்தம் பங்களூரிலிருந்து ஹைதராபாத் போயிருந்த போது, எனது காரிலிருந்து வண்டி ஓட்டுனர் உரிமம், காரின் பதிவுப் புத்தகம், எனது காசோலைப் புத்தகம் இவை திருட்டுப் போயின.

பங்களூரு திரும்பியதும் ஓட்டுனர் உரிமம், காரின் பதிவுப் புத்தகம் இவற்றின் நகல் பெற விரும்பி ஆடோமோபைல் அஸ்ஸோசியேஷன் சென்ற போது உபேந்த்ரா என்ற ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவருடன் பல விஷயங்கள் பற்றிப் பேசியபோது, புகைப் படம் எடுத்தல் பற்றிப் பேச்சு வந்தது. அவர் நான் எடுத்த படங்களைக் காட்டுமாறு கேட்டார். “முதலில் உங்கள் படங்களைக் காட்டுங்கள்” என்றேன். அவர் எடுத்த படங்கள் சில வற்றைப் பார்த்ததும் நான் எடுத்த படங்களைக் காட்ட மறுத்தேன். காரணம் அது வரை எனக்குத் தெரியாது புகைப் படம் பிடித்தலில், பிக்டோரியல், லேண்ட்ஸ்கேப், போர்ட்ரைட், இயற்கை, டேபிள் டாப் ஸ்டடி, ஃபேஷன், இண்டஸ்ற்றியல் என்று பல பிரிவுகள் இருக்கின்றன என்பதும், ஒருவர் நல்ல புகைப் படக் கலைஞராக வேண்டுமென்றால் இவற்றில் ஒன்றினை தீவிரமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும்..

உபேந்த்ரா என்னை விலங்குகள் பறவைகள் இவற்றைப் படம் பிடிப்பதில் வல்லுனரான டி.என்.ஏ.பெருமாள் என்பவருக்கும் சி.ராஜகோபால் என்பவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அன்று பிடித்தது எனக்கு புகைப் படம் எடுப்பதின் மீதான காதல்.

ராஜகோபால் ஒரு ஏரோனாடிகல் எஞ்சினியர். அவர் ஒரு பிக்டோரியலிஸ்ட். நிலப் பறப்புகள் மற்றும் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடிப்பவர். உலக அளவில் பெயர் பெற்றவர். அவர் பெயருக்குப் பின் வரும் பட்டங்கள் சுமார் பத்து இருக்கும். பரிசுகள் எண்ணில் அடங்காது.

அவர் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவர் ஒரு கதை சொன்னார். அவரது உறவினர் ஒருவர் 8mm சலனப் படக் காமிரா வாங்கினாராம். அந்த நாட்களில் வீடியோக் கேமிராக்கள் வரவில்லை. ஏதாவது ஒரு நிகழ்ச்சியை சலனப் படமாகப் பிடித்துக் காட்ட வேண்டும் என்றால் 8mm கேமிரா தான் துணை. கேமிரா வங்கியவர் ஒரு கல்யாணத்தினைப் படம் பிடித்து அதை பிறருக்குப் பெருமையோடு ப்ரொஜெக்டரில் போட்டுக் காட்டினாராம்.

தெருவில் எடுத்த காட்சிகளும், மேடையில் பெற்றோமேக்ஸ் வெளிச்சத்தில் எடுத்த படங்களும் சுமாராகத் தெரிந்தன. அடுத்து வந்தது விருந்துக் காட்சி. ஆகாசத்தில் விட்டு விட்டு நீண்ட் வெள்ளைக் கோடுகள். மற்ற இடமெல்லாம் கருப்பு. அவை அங்கிருந்த குழாய் விளக்குகள். ஆங்காங்கே வெள்ளைத் திட்டுகளாக நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர்களின் சட்டைகள்.

திடீரெனெ வெள்ளையாக கும்பாரமாய்க் குவித்து வைக்கப் பட்ட ஒன்று காற்றிலே மிதந்து வந்து கொண்டிருந்தது. நடுவில் ஆங்காங்கே ஒரு வினாடி அது நிற்கும். அதிலிருந்து கொஞ்சம் வெள்ளை இடம் மாறும். பின் அங்கிருந்து சிறு சிறு உருண்டைகளாக மாறி சிறிது தூரம் மேலழும்பிப் பின் மறைந்து விடு.ம் அந்த உருண்டைகள்.

அது வேறு ஒன்றும் இல்லை. சரியான அளவு எக்ஸ்போஷர் கொடுக்காததால் குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் வெள்ளையாயிருந்த சாதம் மட்டுமே தெரிந்திருக்கிறது. இருந்தாலும் உறவினருக்கோ தன் படைப்பில் பரம சந்தோஷம்.

இப்படித் தான் நம்மில் பலரும் ஆரம்ப நாட்களில் இருக்கிறோம். பிறந்த போதே யாரும் புகைப் படக் கலைஞராகப் பிறப்பதில்லை. ஆனாலும் ஒரு கேமிரா கைக்கு வந்த உடன் சில விஷயங்கள் பற்றித் தெரிந்து கொண்டால் நாமும் வெட்கப் படாது நமது படைப்புகளைப் பிறருக்குக் காட்ட முடியும். அவை என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளு முன் இதோ இன்னொரு கதை.

ஒரு விட்டில் விருந்தினர்களுக்கு வீட்டுக் கார அம்மா புகைப் பட ஆல்பத்தினைக் காட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென, “அதோ லில்லி அத்தை” என்று கத்தியது அவர் குழந்தை. “எங்கே?” என்று அனைவரும் கேட்க, “அதோ” என்று காட்டியது குழந்தை படத்தில் ஒரு ஓரத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்த லில்லி அத்தையின் பின் பகுதியை!

படம் புரட்டப் படுகிறது. மீண்டும் குழந்தையின் குரல், “அதோ எங்கள் டாமீ”. “எங்கே?” என்று கேட்போருக்குக் குழந்தை காட்டுகிறது, படத்தில் ஒரு விளிம்பில் தெரியும் டாமியின் வாலை.

லில்லி அத்தையையோ, செல்ல நாய் டாமீயையோ படத்தில் காட்ட வேண்டும் என்றால் அவர்களின் முகத்தை அல்லவா காட்ட வேண்டும்?

நாம் பிடிக்கும் படங்கள் எல்லாமே ‘படங்கள்’ என்று சொல்ல முடியாது.

‘ஆகா இந்தப் படத்தைப் பெரிதாக்கி வீட்டில் சுவற்றில் மாட்டோமா’ என்ற எண்ணத்தையோ அல்லது பார்ப்பவரின் மனத்தில் ‘மீண்டும் ஒரு முறை பார்க்க மாட்டோமோ’ என்ற ஆவலையோ தூண்டும் படங்களே ‘படங்கள்’. மற்றவை எல்லாம் ஜடங்களே.

திரு ராஜகோபாலின் படங்கள் கருப்பு வெள்ளை படங்கள் தான். அவைகளில் ஒளியின் விளையாட்டினக் கொண்டு கரியினால் வரையப் பட்ட ஒரு ஓவியம் போன்ற தோற்றத்தினைக் கொண்டு வந்திருப்பார். காலஞ் சென்ற திரு ராஜகோபால் பற்றி சொல்லி விட்டு அவரது படம் ஒன்றையும் உங்களுக்குக் காட்டா விட்டால் எப்படி?

பலராலும் வெறுக்கப் படும் எலியையும் அதனை நெருப்பில் வாட்டித் தின்போரையும் வைத்துக் கொண்டு பரிசுகள் பெற்றிடும் படம் ஒன்றினை எடுக்க முடியுமா? ஏன் முடியாது என்று கேட்காமல் அதை செய்து காட்டினார் திரு ராஜகோபால். இங்கே அந்தப் படம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புகைப்பட அனுபவங்கள் Copyright © 2015 by கல்பட்டு நடராஜன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book